Monday, January 5, 2015

கல்வியாளர்களிடம் உள்ள வாசிப்புப் பழக்கம்வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி; அழகான பசி; ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும். சிந்தனையும் செயல்பாடுகளும் இணையமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், வாசிப்பு என்பது களிப்பூட்டும் ஒன்றாக இல்லாமல், தரவுகள் சேகரிக்க உதவும் ஊடகமாகவே பயனாகின்றது. வெட்டி ஒட்டும் கலாச்சாரம் வாசிப்பின் பல முனைகளை மழுங்கடித்துவிட்ட, சிந்தனை செரிவற்ற, தரவுகளின் தொகுப்பால் ஆன ஒரு சமுதாயத்தைதான் கட்டமைத்துள்ளது. தகவல் நிறைந்த சமுதாயமாக ஆகும் அவசியத்திலும், அவசரத்திலும், அறிவாற்றலும், மெய்யறிவும் தேடும் சாத்தியத்தை நாம் இழந்துவிடுவதைப்பற்றி சிந்திப்பதில்லை.

இது தற்கால கல்வியாளர்களிடையே அதிகமாய் உள்ளது.  ஆத்ம அறிவு, எல்லையற்ற அறிவு, முழுமையைத் தேடி அடையும் ஞானம் போன்ற பதங்கள் எந்த விதமான எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு நுகர்வோர் கலாச்சாரம் மையம் கொண்டுவிட்ட சமுதாயம் உருவாகிக் கொண்டிருப்பதற்கு கல்வித் துறையைச் சார்ந்தவர்களே பெரும் பங்காற்றி வருகின்றனர். மனித வாழ்வில் தினமும்  அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு  வாசிப்பு பெரும் பங்காற்றுகின்றதென்றால் அது மிகையாகாது.

குறிப்பாக கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்கள் வாசிப்புத் தொடர்பாக அல்லது தகவல் அறிதல் தொடர்பாக தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகிலுள்ள அதிசிறந்ததானதொரு நூலை நாம் வாசிக்காவிட்டாலும் பறவாயில்லை. ஆனால், தினமும் நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை வழங்குகின்ற தினசரிப்பத்திரிகைகளையாவது தவறாது வாசிக்கும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். பெரும்பாலும் கல்வித்துறையில் இருக்கும் நாம் மனிதனுக்கு நல்லியல்புகளையும் நல்ல மனப்பாங்குகளையும்  வழங்கக்கூடிய நூல்களை நாம் தேடி வாசிக்க வேண்டும்.

இதன் மூலம் நமது மொழி ஆற்றல்களை வளர்க்க முடியும். அச்சு ஊடகங்களை வாசிப்பது போன்று இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலமும் நாம் தகவல்களை அறிந்துகொள்ள முடியும். இதனால் நாம் பயிற்றுவிக்கும் மாணவர்களும் நல்ல வாசிப்புப் பழக்கத்தைப் பெற்று வளர்வர். வாசிக்கும் சமூகம் அதிகமாய் உருவாகும்.
     
வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனை மேம்படுத்தும். அதேபோல் நாம் கற்றுக் கொண்டதை வெளிப்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சம் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பது என்பதாகும். கற்றுக்கொடுப்பது என்பதில் நாம் படித்தவைகளைத் தொடர்ந்து மாணாக்கர்களிடம் பகிர்ந்து கொள்வது அல்லது ஒருவிஷயத்தைப் பற்றி அவர்களுடன் விவாதங்களை நடத்துவது, கூட்டாகப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம். கற்பதும், கற்றுக்கொடுப்பதும் இணைந்ததாக வாழ்வு அமைந்தால் மனிதனின் வாழ்வு முன்னேற்றகரமாக அமையும். எதிகால சங்கதியினரின் வசிக்கும் பழக்கமும் சிறக்கும். எனவே கற்பதும் கற்றுக்கொடுப்பதும் ஒரு உன்னதமான பணியாகும் என்பதை நாம் எப்போதும் மனதில் நில நிறுத்த வேண்டும்.

      ஆசிரியர்களில் பெரும்பாலானோர் புத்தக ஆர்வத்தை இந்தியன் மூவி நியுஸ்’, மன்னன், தென்றல், நயனம்  என நிறுத்திக்கொள்கின்றனர். நமக்கு முந்தைய தலைமுறையினரிடம் இருந்த அளவு வாசிக்கும் பழக்கம் கூட நம்மிடையே இல்லை. அவர்கள் குறைந்தபட்சம் சமயம் சார்ந்த நூல்களை வாசிக்கும் பழக்கத்தையாவது வைத்திருந்தனர்.  ஆனால் இக்கால ஆசிரியர்களோ கற்பித்தலுக்குத் தேவையானவையைக் கூட வாசிப்பதில்லை. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணம் என்று பொதுப்படையாகவும் சொல்லிவிட முடியாது. இணையத்தில் புத்தகம் வாசிக்கும் ஒரு கூட்டமும் உள்ளது.

ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் அம்மொழியில் நாம் புலமை பெற முடியும். மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள பல புதிய சொற்களை அறிய அம்மொழி நூல்களை வாசிக்க வேண்டும். அத்துடன் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.

மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் ஆசிரியர்கள்  அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. இதன் மூலன் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக மாறவும் மாணவர்களுக்குக் கற்பிக்கவும், வாசிப்பானது துணைபுரிகிறது.
இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு மனமகிழ்வு பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. கதை, கட்டுரை, கவிதை.,செய்யுள் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றின் சுவையை உணர்ந்து இரசிப்பது மனம் மகிழ்கின்றது.
சுயமாகக் கதை, கட்டுரை, கவிதை எழுத விரும்புகிறவர்கள் முதலில் அவை தொடர்பான பல நூல்களைப் படித்து அறிய வேண்டும். அப்போதுதான் சொந்தப் படைப்புகளைப் படைக்கும் போது அவை தரமானவையாக இருக்கும். பல தகவல்களைத் தன்னுடைய படைப்புகளில் புகுத்த முடியும். படைப்பாற்றல் திறன் கல்வியாளர்களிடமிருந்து புறப்படுதலே நல்லது.

எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய முடிகிறது. நூலளவே ஆகுமாம் நுண்ணறிவுஎன்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்வோம்; நாளைய சமூகத்தை வாசிக்கும் சமூகமாக மாற்றுவோம். வாசிக்கும் பழக்கம் இந்த தலைமுறையிடம் குன்றியதற்கு சில காரணங்களை நாம் இங்கு முன் வைக்கலாம்

முதலாவது நம் கல்வி முறை. வாசித்தலை வெறுக்கும் அளவிற்கு மனனம் செய்தலை புகுத்திவைத்திருத்தலும் உண்டு எனக் கூறலாம். பெரும்பாலும் ஆசிரியர்கள் மாணவர்களை மனனம் செய்யத் தூண்டுவதிலே குறியாய் இருக்கின்றனர். காரணம் அவர்களையும் கல்வி முறை அப்படியே வளர்த்திரிக்கிறது என்று கூறலாம்.

நாம் சிறு வயதில் படித்த சிறுவர்களுக்கான புத்தகங்கள் அளவு இன்று வெளிவரும் புத்தகங்கள் இல்லை என உறுதியாகக் கூறலாம். அதற்கு மேல் இன்றைய குழந்தைகள் நிகழ்ச்சிகள் ஒரு சாபக் கேடு என்றே சொல்லலாம். ஒரு நிகழ்ச்சியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றனர். அதில் அதிகமாக நேரத்தை நாம் செலவிடுகிறோம். இதுவே பொழுது போக்காகக் கருதுகிறோம். இங்கு வாசிக்கும் பழக்கம் முழுவதுமாக அடிபட்டுப் போகிறது.
      அடுத்ததாக இளைய ஆசிரிய சமுகத்தினரிடம்  வாசிக்கும் பழக்கம் இல்லாததற்கு நான் பார்த்த சிலவற்றைக் கூறுகிறேன்.  பொதுவாக வாசித்தலை, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எள்ளிநகையாடும் ஒரு கூட்டம் உண்டு. அவர்களுக்குப் பயந்தோ, அதுதான் பெருமை என்று நினைத்தோ சிலர் வாசிப்பதே இல்லை. இதனைக் கல்லூரியில் பயிலும் ஒரு சில பயிற்சி ஆசிரியர்களிடம் கண்கூடாகப் பார்க்கலாம். சிலர் நேரவிரயம் எனவும் கருதுகின்றனர். அவர்களுக்கு வேறு தலையாய கடமைகள் இருக்கும், அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது. இன்னும் சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதைப் பெருமையாக எண்ணித் தமிழ் நூல்களை வாசிப்பதில்லை. எந்த மொழியாயினும் அது வாசிக்கும் நூலின் தரத்தைப் பொருத்துதான் அமைகிறது. வாசிப்பதற்கு மொழியினால் பெருமையோ சிறுமையோ கிடையாது. வாசிக்கும் பழக்கம் இல்லை ஆனால், வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது என்றால், தங்களின் பழக்கத்தை மிக எளிமையான நூலில் இருந்து தொடங்கலாம். இல்லையேல் அது கடினமாய்த் தான் இருக்கும். பிறருக்கு பரிசாய் நூல்களைக்கொடுக்கலாம்.

எவன் ஒருவன் அதிகம் வாசிக்கிறானோ அவனால் தான் சபையில் சிறந்த முறையில் பேசவோ, சிறந்த நூல்களை எழுதவோ முடியும். இவ்விரண்டு ஆசைகள் உள்ளவர்கள் கட்டாயம் அதிகம் வாசியுங்கள்.

No comments:

Post a Comment