Wednesday, July 10, 2013

கட்டுரை எழுதுவது எப்படி? (மாணவர்களுக்கு இப்படியும் போதிக்கலாம்)

               
மனதில் தோன்றும் கருத்துக்களைக் கோவைப்படுத்துமாறு காரணகாரியத் தொடர்பில் அழகான மொழியில் அமைப்பதுக் கட்டுரையாகும். கட்டுரையைக் 'கோப்புரை' என்றார் மறைமலை அடிகள். ஒரு பொருளைப்பற்றிப் பல கருத்துகளை இசைத்துக் கோவைப்பட வரையப்படும் சொற்பெருக்கேக் கட்டுரையாகும். இயற்கையில் மனதில் தோன்றி எழும் எண்ணங்கள், மொழியைப் பொறுத்தவரையில், இரண்டு விதமாக வெளிப்படும். ஒன்று வாய்மொழி மற்றோன்று எழுத்து மொழியாகும்.

                    பேச்சின் வாயிலாக வெளிப்படும் எண்ணங்கள் எழுத்து வடிவம் பெறாமல் நிலைத்த தன்மையை பெற இயலாது. இவை சிறந்தவனவாய், கேட்க வாய்ப்பிராத பிறரும் படிக்கத்தக்கவனா என்றும் நிலைத்த தன்மையை அடையத்தக்கவனவாய் இருக்க வேண்டுமானால் இவை எழுத்து நிலையைப் பெற வேண்டும். ஒரு பொருளைப்பற்றிய கருத்துக்களை நிரல்பட பேச்சு மூலம் வெளியிடுவது வாய்மொழிக் கட்டுரையாகும்.      அதையே எழுத்து மூலம் வெளியிடுவது எழுத்துக் கட்டுரையாகும் கட்டுரைப் பயிற்சிகளைத் தருதலில் ஆசிரியர் இயன்றவரை விதிவருவித்தல் முறையே மேற்கொள்ள வேண்டும். எல்லாம் விதமான கட்டுரைப் பயிற்சிகளும் எளிமையிலிருந்து அருமைக்கும், தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்கும், தெளிவிலிருந்து சிக்கலுக்கும், காட்சிப் பொருளிலிருந்து கருத்துப் பொருளுக்கும் சென்றால் மாணவர்கள் கட்டுரைப் பயிற்சியில் பெரும் பயன் எய்துவர்.
பத்தி பத்தியாகப் பகுத்து எழுதுவதுதான் கட்டுரையை நெறிபடி எழுதுவதாகவும் நேர்த்தியான எழுத்துப் படிவமாகவும் கருதப்படும். அப்படி எழுதப்படும் கட்டுரைகளையே படிப்போர் எளிதாகப் படித்துப் புரிந்து கொள்வர். கருத்துகள் தெளிவாக இருந்தால் பத்திகள் தெளிவாக அமையும். மேலும் முழுமைப் பெற்ற கட்டுரை என்பது முகவுரை பத்தியுடன் தொடங்கி, உடற்பகுதி, முடிவு பத்தி ஆகிய கூறுகள் பொருந்தியதாகக் காணப்படுகிறது. பத்தி வகைகளைப்பற்றி சிந்திக்கும் போது மேலும் ஒரு வகைப்பாடு இங்கு கவனிக்கத்தக்கதாகும். அவை விதிவிளக்கு முறை பத்தியமைப்பு, விதி வருமுறை பத்தியமைப்பு அல்லது இரண்டும் கலந்த முறையில் அமையும் பத்தியமைப்பாகும்.
 
விதிவிளக்கு முறை :

 விதிவிளக்கு முறை எனப்படுவது கொடுக்கப்பட்டத் தலைப்பின் மையக்கருவை பத்தியின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ விளக்கி எழுதும் ஒரு வகையாகும். உதாரணத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைக் காணலாம்:
                                                         கல்வி
கல்வி என்பது அறிவு, நல்லொழுக்கம், நுட்பத் தகைமை அகியவையின் கலவையில் உருவாகும் கற்றல் கற்பித்தல் ஆகும். கல்வி தொழில், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம் நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் இலக்காகக் கொண்டுள்ளது. முறைசார்ந்த கல்வியில், தொழில்முறை ஆசிரியர்கள் கற்பித்தலிலும், பயிற்சி கொடுப்பதிலும் ஈடுபடுவர். ஒரு சுதந்திரமான கல்வி மரபில், ஆசிரியர்கள் தமது பாடங்களுக்காகப் பல துறை அறிவையும் பயன் படுத்துவர். திறன்கள் கற்க விரும்புவோருக்கு சிறப்புக் கல்வியும் உண்டு. வானூர்தி ஓட்டுனர் பயிற்சி இத்தகைய கல்வி நெறிகளுக்குள் உட்பட்டதாகும். - தமிழ் விக்கிபீடியா


           கல்வி எனத்தொடங்கும் முதல் சொல்லே இப்பத்தியில் முதல் சொல் எனப்படும். அதனைத் தொடர்கின்ற வாக்கியங்கள் அனைத்தும் கல்வியை விளக்கும் வண்ணமே அமைகின்றன. இவை அனைத்துமே சார்பு வாக்கியங்களாகவே தொடரப்படுகின்றன. இந்த அமைப்பு முறையில் உருவாகும் பத்தியே விதிவிளக்கு முறையில் அமைந்த பத்தியாகக் கருதப்படுகிறது.
 
விதிவருமுறை:
 
விதிவருமுறையில் அமைகின்ற பத்தி, விதிவிளக்கு முறைக்கு எதிராக அமைகிறது.பத்தியின் முதல் வருகின்ற மையப்பொருளை விளக்க உதவும் சார்பு வாக்கியங்களும், பத்தியின் இறுதியிலே இந்தச் சார்பு வாக்கியங்களின் உள்ளடக்கத்தை உறுதி செய்யவே கருத்து வாக்கியம் இடம் பெறும். இங்கே ஒரு உதாரணத்தைக் காணலாம்:
 
                                                     நேரிசை ஆசிரியப்பா
ஆசிரியப்பாவிற்கு உரியதான அகவலோசையை ஊட்டும் ஆசிரியத்தளை பெற்று, ஈற்றயல் சிந்தடியாகவும் மற்றவடிகள் அளவடிகளாகவும் அமைந்து, மூன்றடி முதல் பல அடிகளைக் கொண்டதாய், ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்ற அசைகளில் ஒன்றாய் கூடி, அவ்வசைகளின் ஈற்றில் பெற்று நடத்துவதே நேரிசை ஆசிரியப்பா ஆகும். (யாப்பியல் – பக்கம் 181)
 
           “ஆசிரியத்தளை பெற்று அதன் ஈற்றில் சிந்தடியாகவும் அளவடிகளாகவும் மூன்றடிக்கு மேல் வந்தால் அதுவே நேரிசை ஆசிரியப்பா ஆகும்.” இதுதான் கருத்து வாக்கியம். இதனை  விளக்கும் சார்பு வாக்கியங்கள் மேலே இடம் பெற்றுள்ளன. கருத்து வாக்கியமோ பத்தியின் இறுதியில் இடம் பெற்றுள்ளது.
 
 
            கலப்பு முறையில் அமைந்த பத்தி :
 
கலப்பு முறையில் அமைந்த பத்தி எனப்படுவது விதிவிளக்கு முறையிலும் விதிவருமுறையிலும் அமைந்த பத்தி வகையாகும். இவ்வமைப்பில் கருத்து வாக்கியம் பத்தியின் தொடக்கத்திலும் இருதியிலும் அமைந்திருக்க இடையில் இக்கருத்தினை விளக்குவதற்கு சார்பு வாக்கியங்கள் அமைந்திருக்கும். பத்தியின் ஆரம்பத்தில் உணர்த்தப்படும் கருத்து, பத்தியின் இறுதியிலும் அதனைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கும். உதாரணம்:
                                                             உள்ளம் வடிவமும்
கலையின் வடிவமே, கலைஞரின் உள்ளத்தையும் கற்பவரின் உள்ளத்தையும் தொடர்புபடுத்துவதாகும். கலஞரின் உணர்ச்சி ஆற்றலுடையதாய், பண்பட்டதாய் விளங்கின் கலை பெறும் வடிவிலும் அந்த ஆற்றலும் பண்பாடும் விளங்கும். ஒருவருடைய உள்ளத்தின் துயரம் அவருடைய கண்ணீரில் புலப்பட , அந்தக் கண்ணீரைக் கண்ட மற்றொருவரின் உள்ளத்திலும் அத்துயரம் ஏற்படுதல் போலவே, கலைஞரின் உணர்ச்சி அனுபவம் அவர் படைத்த கலையின் வடிவத்தில் புலப்பட, அதைக் கற்பவரின் உள்ளத்திலும் அதே அனுபவம் விளைகிறது. ஆகவே, அனுபவம் ஓர் உள்ளத்திலிருந்து மற்றவர் உள்ளத்திற்குப் பரவுவதற்குக் கலையின் வடிவம் பயன்படுகிறது. (இலக்கியத் திறன் – பக்கம் 152)
        “கலையின் வடிவமே, கலைஞரின் உள்ளத்தையும் கற்பவரின் உள்ளத்தையும் தொடர்புபடுத்துவதாகும்” இப்பத்தியில் இதுவே கருத்து வாக்கியமாகவும் முதல் வாக்கியமமகவும் வருகிறது. தொடர்ந்து வரும் வாக்கியங்கள் அனைத்துமே சார்பு வாக்கியமாகத் திகழ்கிறது. பத்தியில் இறுதியாக “ஓர் உள்ளத்திலிருந்து மற்றவர் உள்ளத்திற்குப் பரவுவதற்க் கலையின் வடிவம் பயன்படுகிறது.” என்ற கருத்து வாக்கியத்தின் உள்ளடக்கத்தோடு முடிவுறுவதயும் காணலாம். இதுவே கலப்பு முறையில் அமைந்த பத்தியாகும்.
 
 
 
அன்பு எனும் தலைப்பில் விதிவிளக்கு முறையில் அமைக்கப்பட்ட பத்தி :


               அன்பு என்பது உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கடவுளால் பரிசளிக்கப்பட்ட விலைமதிக்கவியலாத ஒரு மாபெரும் கொடையாகும். அன்பு என்பது வலிமையான பாசத்தையும் நெருக்கமான தொடர்பையும் காட்டுகின்ற ஓர் உன்னத உணர்ச்சி. இந்த அன்பானது மனிதன் கடவுள் மீதும், மனிதன் மனிதன் மீதும், மனிதன் மிருகங்கள் மீதும் காட்டுவனவாகப் பரினாமித்துக் கொண்டிருக்கிறது. மனிதன் கடவுள் மீது காட்டும் அன்பு பக்தியாகிறது. அதே அன்பு ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீதும் மிருகம் மீதும் காட்டும் போது இரக்கம், கனிவு, பரிவு மற்றும் பரிதாபம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு ஆவணமாகிறது.  இப்படி பல கோணங்களைக் கொண்ட அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் மாபெரும் சக்தியாக திகழ்கிறது. அன்பு பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும் பெற விரும்புவதுமாகவும் இருக்கிறது. சில நேரங்களில்  பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக இருப்பதை உணர முடிகிறது. அன்பாக இருப்பதிலும் அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் மட்டுமே மனிதனுக்கு சந்தோஷமான உணர்வு ஏற்படுகின்றது.
 
 

அன்பு எனும் தலைப்பில் விதிவருமுறையில் அமைக்கப்பட்ட பத்தி :


            சந்தேகம், கவலை, வருத்தம் ஆகியவை அகந்தையின் கீழ் உலகத்தின் உறுதிபாடில்லாத நிழலாகும். யார் ஒருவர் ஆத்மாவின் சாந்தமான உயரங்களின் மீது ஏறிச் செல்கிறாரோ அவரை அதற்குப் பின், ஒரு போதும் துன்புறுதபடமாட்டார். யார் ஒருவர் அவர் வாழ்க்கையின் விதியைத் தெளிவாக புரிந்து கொள்கிறாரோ அவர், துயரத்தை எப்போதுமாக மறையச் செய்கிறார். அவ்வாறு தெளிவாகப் புரிந்து கொள்கிறவரே வாழ்க்கையின்  மிக உயர்ந்த விதியை கண்டு கொள்வார். அந்த புரிதலை ஏற்படுத்தும் சக்தி எல்லாவிதமான வெறுப்புகளிலிருந்தும், முட்டாள்தனத்திலிருந்தும் ஒருவரின் மனதை விடுதலையாக்கிவிடும். அந்த சக்தி சேவையின் கருவிகளாக உபயோகித்து, பேரின்பத்தின் பேருவகையின் மிக உயர்ந்த நிலையில் ஒருவரை வாழ செய்யும். அது எவ்விதமான நஷ்டத்தையும் ஒருவருக்கு தராது. ஆம்! அது அன்பு என்பதையும் அழிவில்லாத அன்பு என்பதையும் கண்டு கொள்வார்.
 
 

அன்பு எனும் தலைப்பில் கலப்பு முறையில் அமைக்கப்பட்ட பத்தி :

             அன்பு எந்த ஒரு வற்புறுத்தலுக்கும் இடம் கொடாமல் ஆரோக்கியமான  முறையில் வெளிப்படுத்துதல் மனித நேயத்திற்கே உயரிய கொள்கையாகும்.  அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அன்பு அனைத்தையும் நம்பும். அன்பு அனைத்தையுமே அன்பாகவே பார்க்கும். இப்படி பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என்றும் அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்லவும் இயலாது. அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு காதல், பாசம், என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அந்த மையத்தயேதான் மையப்படுத்துகிறது. மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால், அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான். காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களை சந்திக்கிறோம் பேசுகிறோம். இவர்களில் எத்தனைப் பேரிடம் உண்மையான அன்போடு பேசி சிரித்திருப்போம்? உதடுகள் மட்டும் சிரிப்பதை விடுத்து, பல பிரச்சனைகள் இருப்பினும், அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்யும் சக்தி அன்பிற்கு மட்டுமே உண்டு.

 

 
 

 
 
 
 

4 comments:

  1. வணக்கம்
    ஐயா
    மிகஅருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் ஜஸ்டின். இருப்பினும் கட்டுரையில் நுட்பமாகக் கையாளவேண்டிய இயைபு, தொடர்ச்சி, மொழிநடை, துறைசார்மொழி போன்ற எண்ணற்ற கூறுகளையும் விளக்கியிருந்தால் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.

    ReplyDelete