Saturday, August 24, 2013

இன்னும் ஓரிரு வாரங்களில் யூபிஎசார் தேர்வில் தமிழ்மொழித் தாள் 2 –ஐ அணுகவிருக்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய முக்கியக் கூறுகள்.



  வணக்கம். இன்னும் ஓரிரு வாரங்களில் யூபிஎசார் தேர்வில் அமரவிருக்கும் மாணவர்களும் தமிழ் மொழி போதிக்கும் ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒரு சில யூபிஎசார் பட்டறைகளால் மாணவர்களும் ஆசிரியர்களும் தேர்வு காலம் நெருங்கும் தருவாயில் பல குழப்பத்திற்கு ஆளகி வருவதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஓர் ஆரோக்கியமான சூழல் ஏற்படாமல் போய்விடுமோ எனும் அச்சத்தில் இவ்விளக்கங்களை உங்களிடம் பகிர்கிறேன்.
           மாணவர்கள் செய்யும் பிழைகளைப் பற்றிப் பேசுகையில் நாம் இங்கு தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் பிழை, தவறு ஆகிய இவற்றிடையே உள்ள வேறுபாடாகும்.

     பிழை எனப்படுவது மொழியமைப்பினையோ அல்லது விதிகளையோ அறியாத காரணத்தால் தோன்றுவது. தவறு என்பதோ கவனக்குறைவு, களைப்பு, கருத்து நாட்டமின்மை, ஞாபக மறதி, அக்கறையின்மை ஆகிய காரணங்களால் அமைவது ஆகும்.

               வகுப்பறைச் சூழலில் மட்டுமல்லாமல் மாணவர்கள் சுயக்கற்றலின் அடிப்படையில் இத்தகைய பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். இதுவே தேர்வு நெருக்கத்தில் மாணவர்கள் செய்ய வேண்டியதாகும்.எழுத்துகளைக் கவனித்து நிறுத்தி எழுதும்படி செய்தல், உருவாக்கிய வாக்கியங்களையோ கட்டுரையையோ மீண்டும் வாசித்துப் பார்க்கச் செய்தல், சகதோழர்களை வாசிக்கச் செய்தல் போன்ற பல்வேறு பொருத்தமான நடவடிக்கைகளின் வழி தவறுகளைக் குறைக்கலாம்.

  பொதுவாக மாணவர்கள் செய்யும் பிழைகள் பலவகைப்படும். எழுத்துப்பிழை, சொற்பிழை, இலக்கணப் பிழை, கருத்துப் பிழை என்று மாணவர்கள் பல்வேறு பிழைகளைச் செய்கின்றனர். மொழியியல் அடிப்படையில் மாணவர்கள செய்யும் பிழைகள் பின்வருமாறு:

1.   ஒலியியற்பிழைகள்

குறில்நெடில் பிழைகள்

ல்-ற்-ழ் பிழைகள்

ர்-ற் பிழைகள்

ண்-ன்-ந் பிழைகள்

இனவெழுத்துப் பிழைகள்

ட்-த்-ற் பிழைகள்


2.   சொல்லியற்பிழைகள்

பெயர்ச்சொல் : வேற்றுமை உருபு தொடர்பான பிழைகள்

இடைச்சொல் தொடர்பான பிழைகள்


3.   புணரியற்பிழைகள்

வலிமிகும் இடங்கள் (தேவையான இட்த்தில் வல்லொற்று இன்றி எழுதுதல்)

வலிமிகா இடங்கள் (தேவையில்லா இட்த்தில் வல்லொற்று இட்டு எழுத்துதல்)

புணர்ச்சி விதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல்.

4.   தொடரியற்பிழைகள்

எழுவாய்பயனிலை இயைபு இன்மை (தினை, பால், எண், இடங்களில்)

வாக்கியங்களைப் பிழையாக அமைத்தல்.

முற்றுப் பெறா வாக்கியங்கள்.


5.   பொருளியற்பிழைகள்

இரு பொருள்பட அமைந்த வாக்கியங்கள் அல்லது தவறான பொருள் தரும் வாக்கியங்கள்.

6.   வரிவடிவப் பிழைகள்

புள்ளி இடாமல் எழுதுதல் / தேவையின்றி புள்ளியிட்டு எழுதுதல்

எழுத்தை விட்டுவிடுதல் / எழுத்தைக் கூடுதலாக சேர்த்தல்.

\
ஓர் எழுத்துக்குப் பதில் மற்றோர் எழுத்தைப் பயன்படுத்துதல்.

சொல்லை இடம் மாற்றி எழுதுதல்.

 
7.   பேச்சுத் தமிழ்ப் பிழைகள்

வழிகாட்டிக் கட்டுரையில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் திறந்த முடிவுக் கட்டுரைகளில் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதை மறந்தெழுதுதல்.


8.   நிறுத்தக்குறிப் பிழைகள்


குறிப்பாக  யூபிஎசார் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களில் C,D,E நிலையில் உள்ளவர்கள் மேலேயுள்ள குறைகளைக் காண்டறிந்து, சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துவதன் வழியும் மேலே நான் கூறியது போல உருவாக்கிய வாக்கியங்களையோ கட்டுரையையோ மீண்டும் வாசித்துப் பார்க்கச் செய்தல் மூலமும் சகதோழர்களை வாசிக்கச் செய்தல் வழியாகவும் ‘D’ ‘E’ மாணவர்களைக் காப்பாற்றலாம்.


வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவில் அட்டவணைக் கருவி மூலம் வாக்கியம் அமைத்தலை அறிமுகப்படுத்தியிருந்தேன்.  அதனை அமைக்கும் விதத்தையும் விளக்கியிருந்தேன். பல ஆசிரியர்கள் அதனைப் பயன்படுத்தி எளிமையாக வாக்கியம் அமைக்க முடிகிறது என எனக்கு மின்னஞ்சல் அனுப்பி நன்றி தெரிவித்தனர். அத்தகைய உத்தியை பயன் படுத்தினாலே போதும். முடிந்த அளவுக்கு நாம் இப்பிரிவை எளிமைப்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், நான் ஒரு சில பள்ளிக்கூடங்களில் பட்டறை நடத்தும் போது, வேறு சில தவறான புரிதல்களால் ஆசிரியர்களும் மாணவர்களும் பயங்கரமாகப் குழப்பப்பட்டுள்ளர்கள் என அறியப்பெற்றேன். இப்பிரிவில் மாணவர்கள் விளக்கச் சொல்லைப் பயன்படுத்தி வாக்கியம் அமைத்தாலே போதும். இப்பிரிவின் எதிர்பார்ப்பு என்னவென்றால் மாணவர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்ற சொல்லை முழுமையாக விளங்கிக் கொண்டார்களா என்பதை அறியவே ஆகும். அதனை உறுதிப்படுத்தவே விளக்கச் சொல் பயன்படுத்த வேண்டும் எனக்  கட்டாயப்படுத்தப்படுகிறது. மெதுபயில் மாணவர்கள் எழுவாய் பயனிலை செயபடுபொருள் அடங்கிய முழுமையான வாக்கியத்தை விளக்கச் சொல் புகுத்தி வாக்கியம் அமைத்தாலே போதும். புள்ளிகள் குறைவாக கிடைக்கப்பெற்றாலும் பிழையில்லாமல் இருப்பதே சிறந்தது. விளக்கச் சொல் சரியாகப் புகுத்தப்பட்டுள்ளதா என்பதை கீழ்கண்டவாறு உறுதி செய்து கொள்ளலாம்:
           
 
   வழிகாட்டிக் கட்டுரை என்று சிந்திக்கும் போது மாணவர்கள் தத்தம் அனுபவங்களையும் ஞாபகசக்தியையும் பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த ஆற்றல்களைத் தூண்டி பொருத்தமான வினாக்களைக் கேட்பதன் வழி அனுபவங்களாக வழிகாட்டலுக்கேற்ப (படத்திற்கேற்ப) வெளிப்படுவதை நல்ல சொல்லாட்சி, வர்ணனை ஏற்ற நிறுத்தக்குறி, எழுத்துப்பிழையின்மை, கவரும் வாக்கியங்களுடன் எழுதுதலையே இப்பிரிவின் எதிர்பார்ப்பு ஆகும். மெதுபயில் மாணவர்கள் சில கேள்விகள் கேட்டுப் பார்ப்பதன் வழியோ, ஆசிரியர் கேட்பதன் வழியோ எழுதுவதற்குத் தேவையானவைகள் பதிலாகத் தங்களின் தரத்திற்கேற்ப மனத்திலிருந்து வெளிப்படும். அதற்கு சில வினாக்களைப் பயன்படுத்தலாம்,
மெதுபயில் மாணவர்களுக்கென ஒரு சில கதை வர்ணனைகளை சூழலுக்கேற்ப எல்லா வழிகாட்டிக் கட்டுரைக்கும் பயன்படுத்தலாம்:
 
காலை நேரம்
காலை கதிரவன் கண் விழிக்கும் நேரமது. பனித்துளிகளின் தூரல்கள் கதிரவனின் எழுச்சியில் உராய்ந்து கொண்டிருந்தன. குளிர்ந்த தென்றல் கதிரவனின் இளஞ்சூட்டை போர்வையாக இழுத்துப் போர்த்திக் கொண்டது.
மதிய நேரம்
கதிரவனின்  கோபம் முத்திப்போனதா என்று தெரியவில்லை! அதன் கோபத்தில் மனித மேனிகள் கண்ணீர் வடித்து நிழலைத் தேடிக்கொண்டிருந்தன. அப்போது…

மாலை நேரம்
காலைச் சூரியனின் பணி முடிய இன்னும் சிறு தருணங்களே எஞ்சியிருந்தன. தனது பணியை முடித்துக் கொண்டு இயற்கை அன்னையின் மடியில் தலை சாய்க்க  சந்திரனுக்காக காத்துக் கொண்டிருந்தான் அவன்.
 
இரவு நேரம்
இருண்ட வானம் சந்திரனின் ஒளியால் பிரகாசித்தது. கணித மேதைகளையும் அசறச் செய்யும் நட்சத்திரங்களின் படையெடுப்புப்   பிரமாண்டமாக இருந்தது. நிலாச்சோறு ஊட்டும் தாயும் ஔவைப் பாட்டியின் கதைகளும் சங்கமிக்கும் தருணம்.

வகுப்பறை

நாளைய தலைவர்கள் கூடியிருக்கும் கூட்டமது. மாணவர்களின் எதிர்காலம் மேசைகள், கரும்பலகைகள், சுவர்கள் போன்றவற்றில் சுவடுகளாகப் பரிணாமம் பெற்றிருந்தன. எழுத்தறிவிக்கும் இறைவனுக்காக மாணவர்கள் காத்திருந்தனர்.
 
திறந்த முடிவுக் கட்டுரையில் கருத்து விளக்கக் கட்டுரையாகவும் அமைப்பு முறை கட்டுரையாகவும் கற்பனை மற்றும் தன்கதையாகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கருத்து விளக்கக் கட்டுரை எழுத வேண்டுமெனில் மாணவர்கள் முதலில் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பின் கருத்தை நன்கு விளங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதுவே இப்பிரிவின் எதிர்பார்ப்பு ஆகும். அப்படி விளங்கிக் கொண்டு தலைப்பையொட்டி மூன்று அல்லது  நான்கு கருத்துகளை விளக்கி எடுத்துக் காட்டுகளுடன் எழுதினால் அதிக புள்ளிகள் பெறலாம். மெதுபயில் மாணவர்கள் 3 கருத்துகளை விளக்கி சிறு சிறு வாக்கியங்களில் எழுதினாலே போதும். இன்னும் இருக்கின்ற ஓரிரு வாரங்களில் மாணவர்கள் கருத்து விளக்கக் கட்டுரைகளை நிறைய வாசித்து கருத்துகளை எப்படி உதாரணங்களுடன் விவரித்து எழுதலாம் எனும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆசிரியர்களும் எதிர்பார்க்கப்படுகின்ற தலைப்புகளை யொட்டி ஒரு மனவோட்டவரை போட்டு விளக்குவது இரு தரப்பு மாணவர்களுக்கும் நற்பயனாக இருக்கும். மாணவர்களை முன்னுரை மட்டும் அமைத்துக் காட்டச் சொல்ல்லாம். 20 நிமிடத்தில் 5 அல்லது ஆறு முன்னுரைகளை வெவ்வேறு தலைப்புகளுக்கு அமைத்துக் காட்டச் செய்யலாம். அது போலவே கருத்துகளுக்கும் முடிவுரைகளுக்கும் செய்யச் சொல்லி வகுப்பில் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்வதால் அனைவருக்கும் பயனாக அமையும். மெதுபயில் மாணவர்களும் பயன்பெறுவர்.
கற்பனை மற்றும் சுயசரிதைகள் பெரும்பான்மையான மாணவர்கள் விரும்பி எழுதும் ஒன்றாக திகழ்கிறது. கற்பனைக் கட்டுரைகள் எழுதுவதற்கென மாணவர்களுக்கு எதிர்கால சிந்தனை மிகவும் அவசியம். காரணம் மாணவர்கள்  எதிர்கால சிந்தனையும் கற்பனையும் இருந்தால் மட்டுமே சிறந்த கற்பனைக் கட்டுரையைப் படைக்க இயலும்.
சுயசரிதையில் உயிரற்ற பொருளே தலைப்பாக அமையும். இது தன்கதையாக இருந்தாலும், கதை எழுதும் களமாக இது கருதப்படாது. மாணவர்கள் தன்னைப் பற்றிய சுய விளம்பரமாகவே இக்கட்டுரையைப் படைக்க வேண்டும். மனிதக் கூறுகள் புகுத்தப்பட்ட ஒரு உயிரற்ற பொருள் மனித உணர்ச்சிகள் பெற்று வாழும் வாழ்க்கையை இங்கு விமர்சிப்பதற்கே புள்ளிகள் வழங்கப்படும் என்பதை கட்டாயம் அறிந்து எழுத வேண்டும். மெதுபயில் மாணவர்கள், இதையரிந்து சிறு சிறு வாக்கியங்களில் எழுதினாலே போதும்.
எஞ்சி இருக்கின்ற இந்த இரு வாரங்களில் மாணவர்கள் மேலே உள்ள அனைத்து விவரங்களையும் பின்பற்றி வந்தாலே போதுமானது. வீண்குழப்பங்களும் நம்பிக்கையின்மையும் மாணவர்களை எழுதவிடாமல் ஆக்கிவிடும். ஆகவே அனைத்தையும் செய்து முடித்து விடலாம் எனும் நம்பிக்கையே ஒரு மாணவனை வெற்றியடைய செய்யும். கேட்பதை விதிமுறைகளுக்கேற்ப படைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்!
முறையான பயிற்சியும் முயற்சியுமே நல்ல தேர்ச்சியைக் கொடுக்கும்! மேல் விபரங்களுக்கு தவறாவல் என்னைத் தொடர்புக் கொள்க. நன்றி.
 

 
 

 

12 comments:

  1. நண்பர் ஜஸ்டின்,
    உங்கள் கரிசனம் போற்றத்தக்கது.மாணவர்களுக்குச் சொல்லவேண்டியதை அழகுறச் சொல்கிறீர்கள். பயனுள்ள ஒன்று. ஒரு ஆசிரியர் தனக்கு எல்லாம் தெரியுமென்ற பாவனையில் கொஞ்ச அலட்டிக்கொள்கிறார்.மற்றவர்களைச் சிறுமை செய்யும் நல்ல பழக்கமும் அவரிடம் உண்டு. அவர் போல் இல்லை நீங்கள். நற்பணி தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கென்று தொழில் தர்மம் என்று ஒன்று உள்ளது....
      அதை நாம் செய்தே ஆக வேண்டும். அது என்னவெனில் நாம் அறிந்து கொண்டதைப் பிறருக்கும் அறியச் செய்ய வேண்டும்..
      இதுவே,ஓர் ஆசானின் கடமை.. பிறரைச் சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்ட அவர் நிச்சயம் ஒரு ஆசிரியராகத் தன் கடமையை நீண்ட நாட்கள் செய்ய முடியாது! இவ்வுலகில் யாரும் யாரையும் சிறுமைப்படுத்தும் எண்ணம் கூடாது! அவ்வெண்ணம் நம்மை வளர விடாது! அழித்துவிடும்! நன்றி ஐயா....

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி ஐயா. மாணவர்கள் செய்யும் இயல்பான தவறுகளை கோர்வையாக விளக்கமளித்தமைக்கு நன்றி. மேலும் பயனுள்ள படைப்புகள் வரவேற்க்கப்படுகின்றது. நன்றி.

    அந்தோனி தாஸ் வேளாங்கண்ணி
    யாம் செங் தோட்ட தமிழ்ப்பள்ளி
    செமாங்கோல், பேராக்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  3. தெளிவான விளக்கம்.மிக்க நன்றி ,ஐயா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  4. மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா. எனக்கு உங்களிடமிருந்து உதவி கிடைக்குமா? எனக்கு ஆரம்பப்பள்ளிக்கான இலக்கண இலக்கிய விளக்கவுரை (soft copy) கிடைக்குமா....

    ReplyDelete
  6. Mikka nanru. Payanaana karuthukkal payanulla kumugayatthai uruvakkum.

    ReplyDelete
  7. Mikka nanru. Payanaana karuthukkal payanulla kumugayatthai uruvakkum.

    ReplyDelete