Wednesday, December 7, 2022

வாசிப்புத் திறன்

  

மொழித் திறன்கள் நான்கு. அவை கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகியவை ஆகும். மொழிக்கு முதல் கேட்டல் திறனாகும். கேட்பதை அடிப்படையாகக் கொண்டே குழந்தை பேசத் தொடங்குகிறது. பள்ளிக்கு வருவதற்கு முன்பே மாணவர்கள் கேட்கும், பேசும் ஆற்றலைப்பெற்று விடுகிறார்கள். வாசிப்புத் திறனும், எழுத்து திறனும் அப்படியல்ல அது திட்டமிட்டுக் கற்பிக்கப்பட வேண்டியவை.
     கேட்டல் திறன் போல வாசித்தலும் ஒரு கொள்திறன் ( RECEPTIVE SKILL ) ஆகும். பேசுதல், எழுதுதல் ஆகிய ஆக்கத் திறன்களுக்கு ( PRODUCTIVE SKILL ) வாசிப்பு எனும் கொள்திறன் அத்தியாவசியமாகிறது. நாளடைவில் கேட்டல் திறனுக்குப் பதிலாக வாசிப்புத் திறனே ஒருவரின் அறிவாற்றலுக்கு மூலமாக அமைந்து விடுகிறது. இத்திறனை அடைந்த மாணவர்களிடையே எப்பொழுதும் வாசிக்கும் பழக்கம் இயல்பாகவே அமைந்து விடும் என்றால் மிகையாகாது.
     வாசிப்பு என்பதற்கு பல வரையறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பக் காலத்தில் வரிவடிவத்தை ஒலி வடிவமாக மாற்றுவதுதான் வாசிப்பு எனக் கருதப்பட்டது. பிறகு வரிவடிவத்தை ஒலி வடிவமாக மாற்றுவது மட்டும் வசிப்பல்ல. மாறாக, பொருள் அறிந்து கருத்துணர்தல்தான் வாசிப்பு எனக் குறிக்கப்பட்டது. எரிஸ் என்பவரோ அச்சில் அல்லது எழுத்தில் உள்ளவற்றைப் பொருளாக்கம் செய்வதே வாசிப்பு என்கிறார்.
    இன்றைய நிலையில் அச்சிலோ கையெழுத்திலோ உள்ள செய்திகளை கண்ணால் பார்த்து வாயால் உச்சரித்து மனத்தால் பொருளுணர்ந்து கொள்வதுதான் வாசிப்பு எனக் கருதப்படுகின்றது. ஆக வாசித்தலில் கண்கள் வரிவடிவங்களை நோக்க, மனம் உணருகின்ற பொழுது பார்த்தால் ( SIGHT ), ஒலித்தல் (SOUND). கருத்துணர்தல் (SENCE) என்ற மூன்று செயற்பாங்குகள் நடைபெறுகின்றன. வாசிப்பு இரண்டு படிநிலைகளில் நடைபெறுகின்றது. முதலில் வாசிக்கின்ற ஒருவர் அச்சிலோ எழுத்திலோ உள்ள எழுத்துக்களை அடையாளம் காண வேண்டும். தொடர்ந்து அவற்றை பொருள் பெயர்க்க வேண்டும்.

       வாசிப்பின் நோக்கங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை சிறப்பு நோக்கம், தொடர் நோக்கம் மற்றும் பொது நோக்கம் என்பவையாகும்.
        சிறப்பு நோக்கம் ஓர் உறுதியான நோக்கத்தைக் கொண்டுள்ளது. அதாவது வாசிக்கும் பகுதியை விரைவாகக் கிரகித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் மாணவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கக் கூடியதாகும். இவை பெரும்பாலும் பள்ளியில் நடைபெறும் நடவடிக்கையாகும். வேகம், தொனி, உச்சரிப்பு போன்றவை சிறப்பு நோக்கங்களில் அடங்கியுள்ள கூறுகளாகும். மாணவர்கள் பலவிதமான வாசிப்புப் பகுதிககளை வாசிக்கும்போது சரியான தொனி, உச்சரிப்பு, வேகம் மற்றும் நிறுத்தற்க்குறிகள் அறிந்து ஏற்ற வேகத்தோடும் வாசிப்பார்கள். இப்பழக்கம் நாளடைவில் மாணவர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். இதன் மூலம் விரும்பி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கும் வாசிப்பதில் மேலும் ஆர்வத்தை ஊட்டுவதற்கும் உடனடி நோக்கம் உறுதுணையாக உள்ளது. வாசிப்பதின்வழி சிந்தனை ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
      தொடர் நோக்கம் என்பது மாணவர்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைவதற்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கேற்ப வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக் கொள்வதற்கும் பெரும் பங்காற்றுகின்றது. அத்துடன் மாணவர்கள் வாசிப்பின் வழி அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ள மிகவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையை மேன்மேலும் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கும் இந்நோக்கம் உறுதுணையாக உள்ளது.
  சிறப்பு நோக்கத்திலுள்ள கூறுகளை மாணவர்கள் கடைப்பிடிப்பார்களானால் அவர்கள் தங்களுடைய பள்ளி வாழ்க்கையை முடித்தப் பிறகு, பொது நோக்கம் அவர்களுக்கு ஒரு முக்கியக் கருவியாக அமையும். அதாவது மாணவர்கள் தங்கள் பொது அறிவை மேலும் வளர்த்துக் கொள்வதோடு பல்வகை நூல்களைக் கற்று தங்களுடைய அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். பெரும்பாலான மாணவர்கள் கருத்துணர்வதற்காகவே வாசிக்கிறார்கள். வாசிப்பை நன்கு புரிந்து, கருத்தில் கொள்வதையே கருத்துணர்தல் என்கிறோம். பல நூல்களையும் நாள், வார, மாத இதழ்களையும் மாணவர்கள் வாசிப்பதன் மூலம் இலக்கியச் சுவையைப் பருக முடிகின்றது. ஆகவே பொது நோக்கங்களைப் பெறுவதற்கு வேண்டிய பயிற்சி முறைகளை மேல் வகுப்புகளில் ஆசிரியர்கள் கையாள வேண்டும்.
                                                                                                                                         தொடரும்

2 comments: